Friday, 25 April 2014

ALINTHA ZAMINKALUM -ALIYATHA KALVETUKALUM-BOOK VIMARCHANAM

“அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுகளும்” – நூல் விமர்சனம்

Orange Themes
By editorApril 23, 2014 06:58
“அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுகளும்” – நூல் விமர்சனம்
நீண்ட நெடிய பாரம்பரியமிக்க பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் கூறுகிறது ‘‘அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுகளும்”.
பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர் முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பற்றிப் பேசுகிறது இந்நூல்.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அரிய செய்திகளையும், ஆதாரங்களையும், கல்வெட்டுகள் கொண்ட புகைப்படங்களையும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் போன பல செய்திகளை ஆதாரங்களுடன் கொண்டுள்ளது இந்நூல்.
பாண்டிய நாடும் 100 நாடுகளும், பாளையக்காரர்களும் பாண்டியனின் மீன் கொடி உருவாக்கமும், 73 பாளையங்களின் பெயர்கள் ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஜமீன்களின் எல்லைகள், ஊர் பெயர்களின் அர்த்தங்கள் பற்றி இந்நூல் பேசுகிறது. உதாரணமாக, புரம் என்ற சொல் சிறந்த ஊர்களை குறிக்கும். ஆதலால் காஞ்சிபுரம், சோழபுரம், பல்லாவரம், குள்ளப்புரம் போன்ற தகவல்களும், கூடல் என்றால் ஆறுகள் கூடிடும் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் என்றும், அவற்றை கூடல் என்று அழைத்துள்ளார்கள் என்றும் பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
‘‘கி.பி. 1290-1296 வரை டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சி செய்தார். அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார்” என்ற செய்தி ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பாளையங்கள் இருந்திருக்கின்றன, கி.பி. 1760 ஆம் ஆண்டு திண்டுக்கல்லிலிருந்து வந்த ஹைதர் அலீயின் படைக்கும் மதுரையிலிருந்து வந்த முஹம்மது யூசுஃப் கானின் கம்பெனிப் படைக்குமிடையே வத்தலக்குண்டில் போர் நடைபெற்றது, இறுதியில் திண்டுக்கல் படையைப் புறமுதுகிட்டோடச் செய்து, வத்தலக்குண்டை முஹம்மது யூசுஃப் கான் வென்றுள்ளார் போன்ற வரலாற்றுற் செய்திகளும் இடம் பெற்றுள்ளன இந்த நூலில்.
பண்டைய தமிழர்களின் சமூக நல்லிணக்கத்திற்கு இந்த நூலில் குறிப்பிட்டுள்ள செப்பேடுகள் ஒரு நற்சான்றாக விளங்குகிறது. பெரியகுளம் பள்ளிவாசல் பற்றியும், மதுரை சம்மட்டிபுரம் பள்ளிவாசல் பற்றியும், வெள்ளைக்காரனால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட முஹம்மது யூசுஃப் கான் சாகிப் (மருதநாயகம்) அவர்களின் உடலின் ஒரு பகுதி இங்கு அடக்கம் செய்யப்பட்ட செய்தியும் இந்நூலில் பெற்றுள்ளது.
இதுபோன்ற பல செய்திகளை வைகை அனீஷ் எழுதிய ‘‘அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுகளும்” நூல் கொண்டிருக்கின்றன.
வெளியீடு:
அஹமது நிஸ்மா பதிப்பகம்
3, பள்ளிவாசல் தெரு,
தேவதானப்பட்டி-625 602.
தேனி மாவட்டம்.
நூலின் விலை: ரூ. 30.00
கவிவாணன்
- See more at: http://www.thoothuonline.com/archives/65024#sthash.KOsMR4vY.dpuf

No comments:

Post a Comment